search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழும்பூர் நிலையம்"

    சென்ட்ரல்-எழும்பூர் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது. பயணிகள் ஆர்வமாக வாங்கி குடித்தனர். #Nilavembukashayam
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்க மாநகராட்சி, சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழை நீர் தேங்கி நிற்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபம், ஓட்டல், கட்டுமான பணி இடங்கள், அரசு மற்றும் தனியார் காலி இடங்களில் மழை நீர் தேங்காதபடி அகற்றும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ், ரெயில் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு இடங்களில் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட நில வேம்பு கசாயம் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இது தவிர சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி 5-வது மண்டலம் சார்பில் மண்டல நல அலுவலர் டாக்டர் கவுசல்யா, முதுநிலை பூச்சியல் வல்லுனர் யமுனா ஆகியோர் முன்னிலையில் பயணிகள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ரெயில் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது. பயணிகள் ஆர்வமாக வாங்கி குடித்தனர். சிறுவர்களுக்கும், பெற்றோர்கள் வழங்கினர். நிலவேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கலாம் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். நூற்றுக்கணக்கான பயணிகள் நிலவேம்பு கசாயத்தை பருகி சென்றனர்.

    மேலும் டெங்கு காய்ச்சல் குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரசாரம் செய்தனர்.

    கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீஸ் குடும்பங்களுக்கு நிலவேம்பு கசாயம் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. #Nilavembukashayam

    ×